தமிழனுக்கு தேசியம் அவசியமா ?!

 

தமிழனுக்கு தேசியம் அவசியமா ?!

 


 

உலகில் மனிதன் எல்லோரும் ஓரினம் ! மனிதர்கள் எல்லோரும் கலப்பினம் தான் ! இன வாதம் தவறு ! அது மனித குலத்துக்கு நன்மை தராது ! கலப்பினமான மனித குலத்துக்குள் தேசிய இனப் பார்வை எல்லாம் தவறானது ! என்றெல்லாம் சிலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

 

 

குமரி கண்டத்தில் கடல் ஊழி ஏற்படும் முன்னும், பின்னும் பல்வேறு கால நிலையில் மொழி உருவாகா காலத்திலும், மொழி தோன்றிய காலத்திலும் மொழி வளர்ச்சி அடைந்த காலத்திலும் என பல்வேறு கால சூழ்நிலையில் மனித குலம் உலகெங்கும் பரவியது உண்மைதான் ! ஆனால் அதற்காக பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் குமரி கண்டத்தில் கடல் ஊழியால் மூழ்கிப் போன மனிதன் இன்று எழுந்து வந்து பேசுவது போல் பேசினால் சிரிப்பதை தவிர வேறு என்ன செய்வது ! இவர்கள் தெரியாமல் பேசுகிறார்களா அல்லது தெரிந்து தெரியாதவர்கள் போல் பேசுகிறார்களா ?

 

 

இவர்களுக்கு நீண்ட விளக்கம் சொல்லுவதைவிட நடைமுறை யோசனனை ஒன்றை சொல்வோம் திராவிடம் பேசுகிறவன் ! இந்தியம் பேசுகிறவன் !  உலகில் எல்லோரும் கலப்பினம் என்று பேசுகிறவன் எல்லோரும் தமிழ் நாட்டை விட்டுவிட்டு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அல்லது நம் அண்டை திராவிட மாநிலங்களான கேரளா, கர்னாடகா, ஆந்திரா, மஹாராஷ்ட்டிரா மாநிலங்களில் சுமார் ஓர் ஆண்டு சாதாரண மனிதனாக தமிழ் மொழி பேசிக் கொண்டு குடி இருந்து விட்டு தமிழ் நாட்டுக்கு வந்து விடவும். அதன் பிறகு பார்ப்போம் ! அவர்களை நம்மோடு சேர்ப்பதா அல்லது ஏர்வாடியில் சேர்ப்பதா அல்லது கீழ்ப்பாக்கத்தில் சேர்ப்பதா என்று !

 

 

நம்மை பார்த்து யார் தமிழர் ?! என்று தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். யார் தமிழர் என்று ஏற்கனவே ஒரு பதிவு ஒன்று எழுதப் பட்டுள்ளது அதில் சென்று பார்த்துக் கொள்ளவும்.

 

 

தமிழர்களுக்குத் தான் தங்களை தமிழர் என்று தெரியவில்லை ஆனால் காவிரி பிரச்சனை வந்தால் கன்னடனுக்கு யார்,யார் தமிழன் என்று துல்லியமாகத் தெரிகிறது.

 

 

முல்லை பெரியாறு பிரச்சனை வந்தால் மலையாளிக்கு யார்,யார் பாண்டிக்காரனென்று (தமிழர்கள்) தெளிவாகத் தெரிகிறது.

 

 

ஆந்திராவில் கூலி வேலைக்கு வருகிறவனில் யார்,யார் தமிழன் என்று தெலுங்கனுக்கு தெரிகிறது.

 

 

தமிழன் தான் திராவிடன், திராவிடன் தான் தமிழனென்று நம் மண்ணில் ஈ.வெ.ரா.வை வைத்து ஏமாற்று அரசியல் செய்ய யார்,யார் ஏமாந்த தமிழனென்று வடுக கன்னடர்களுக்கு தெரிகிறது.

 

 

தமிழ் ஈழத்தை சுடுகாடாக்கும் போது, சர்வ தேசியக் கூட்டுப் படைக்கும் இந்திய இலங்கை அரசு படைகளுக்கும் அங்குள்ள காட்டிக் கொடுக்கும் சிங்கள வடுகம் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் யார்,யார் தமிழன் என்று தெரிகிறது.

 

 

தமிழக மண்ணில் இருந்து கண்டெடுக்கப் பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொன்மையான கல்வெட்டுக்கள் படியெடுத்து, ஆய்ந்து கண்டறியப் படாமலும், தொலைத்தும், ஆதாரங்களை மறைத்தும், தமிழக மண்ணில் அகழ்வாய்வு செய்து கண்டறியப்படும் உண்மைகள் தமிழன் தான் மூத்தக்குடி என நிறுவ ஆதாரங்கள் கிடைக்கப் பெறுவதைக் கண்டு தொல்லியல் ஆய்வை நிறுத்திய மத்திய அரசுக்கு யார்,யார் தமிழன் என்று தெரிகிறது.

 

 

தமிழகத்தில் உள்ள மத்திய மாநில பொதுத்துறை (நீதி, நிர்வாகம், பாதுகாப்பு, இரயில்வே உட்பட) நிறுவனங்களில் பெரும் அளவிற்கு வட இந்தியர்களை பணியில் அமர்த்தும் மத்திய மாநில அரசுகளுக்கு யார்,யார் தமிழன் என்று தெரிகிறது.

 

 

தற்போது தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிலையங்களிலும் வட இந்திய மாணவர்களுக்கு பெருமளவில் வாய்ப்பளிக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு யார்,யார் தமிழன் என்று தெரிகிறது.

 

 

தமிழகத்தில் சினிமா துறையில் வடுகர்களுக்கு சரிவு வந்த போதெல்லாம் கலைவாணர் போன்றவர்கள் சம்பளம் பெறாமலேயே நடித்துக் கொடுத்து சினிமா துறையை காப்பாற்றி விட, இன்று பாரதிராஜா போன்ற தமிழ் இயக்குநர்கள் இனம், மொழிக்கு அப்பாற்பட்டு இளிச்சவாயன்களாய் மாற்று மொழி நடிகர், நடிகைகளை வளர்த்துவிட திரைப்பட சங்க தலைமைக்கு தமிழனை வரவிடாவண்ணம் வடுகர்கள் தலைமையை கைப்பற்ற யார்,யார் தமிழனென அவர்களுக்கு தெரிகிறது.

 

 

உலகின் தொன்மையானதும், மூல இசையுமான கர்நாட்டின் இசை என்னும் தமிழிசையை தமிழ் இசைவானர்களிடம் கற்றுத் தேர்ந்து, அதை தெலுங்கில் உயர் மெட்டுகளில் கீர்த்தனைகள் பாடிக் கொண்டு, தமிழர்களுக்கு அவர்களின் இசை அறிவை கொண்டு சேர்க்கும் பணியை செய்ய மறுக்கும் வடுக பிராமணர்களுக்கு யார்,யார் தமிழன் என்று தெரிகிறது.

 

 

“யாதும் ஊரே ! யாவரும் கேளிர் !” என்று சொன்னது தமிழன் தான் ! ஆனால் உலகில் எந்த மானிட சமுதாயமும் அவ்வாறில்லை !

 

 

உலகில் எல்லா தேசிய இனங்களும் “யாதும் எமக்கே ! யாவரும் கேளிர் !” என்றிருக்கும் வேளையில், நம்மையும் அவ்வாழ்வை நோக்கி நிர்பந்திக்கும் கட்டாயத்தால் தமிழனுக்கும் தேசியம் அவசியமாகிறது !

 

தேசியமா !ஊழலா ! கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2018/03/blog-post_64.html

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக