நிழல் அரசும்! தமிழ் தேசியமும்!


நிழல் அரசில் தேசியம் அவசியமா?


தற்போது சர்வ தேசிய வல்லாதிக்கம் தன் செயல் பாடுகளை நேரடியாக காட்ட துவங்கியுள்ளது. இந்நிலையில் இனி நாம் தேசம், தேசியம் குறித்து சிந்திப்பது சாத்தியமா? அவசியமா? என்றெல்லாம் சிலர் பேச துவங்கியுள்ளனர். 

 

வல்லாதிக்கம், ஏகபோகம் செலுத்தும் இவ்வேளையில் நாம் பேசும் தேசியம் என்ன தீர்வை தந்து விடப் போகிறது. தமிழர்களை ஒரு தமிழன் ஆட்சி செய்ய வந்துவிடுவானாகில், தமிழர்களை ஏகபோகத்திடமிருந்து விடுவித்து விட முடியுமா!

 

திராவிட கட்சிகள் அன்றி தமிழனுக்கான கட்சி என்று தன்னை அறிவித்து கொள்ளும் கட்சியானது ஆட்சிக்கு வந்து விட்டால் நிழல் அரசிடமிருந்து, தமிழர்களை மீட்டு விடுமா? என்றெல்லாம் கேட்கிறார்கள்.

 

ஒரு ஊரில் வணிக பெருமுதலாளி ஒருவன் இருக்க, அங்குள்ள சிறு முதலாளிகள் எல்லோரும் அவனுக்கு கட்டுப்பட்டு நடக்க, அந்த சிறு முதலாளிகளிடம் கொத்தடிமை கூலி தொழிலாளியாக இருக்கின்ற ஒருவர், என்னை விட்டு விடுங்கள் நானாக சென்று பிழைத்து கொள்கிறேன், என்று சொல்ல, அவர் அவனை விட்டு விட மறுப்பார் ஆகில் அந்த விடயத்தில் உங்களின் தீர்வு என்னவாக இருக்கும்?

 

ஐயா, நீங்கள் கொத்தடிமையாக இருக்கின்ற உங்கள் முதலாளியே பெரு முதலாளியிடம் அடிமையாய் இருக்கும் போது, அவரிடமிருந்து நீங்கள் வெளியே போய் என்ன சுதந்திரத்தை அடைந்து விட போகிறீர்கள்.

 

உங்களையும் அந்த பெரு முதலாளி கட்டுப்படுத்த தானே போகிறான். அந்த பெரு முதலாளியை எதிர்க்க உங்களுக்கு திராணி இருக்கிறதா! பேசாமல் அடிமைக்கு அடிமையாய் இருந்து விட்டு போங்களேன் என்று கூறுவீர்களா! அப்படி கூறினால், அது நியாயமா!

 

அதற்கு அந்த கொத்தடிமையோ, ஐயா, எந்த பெரு முதலாளியின் தயவில் நான் என் முதலாளியால் அடிமை கொள்ளபட்டிருக்கின்றேனோ, அந்த பெரு முதலாளியின் தயவிலோ அல்லது எனது தனித்த விடுதலை போராட்டத்தினாலோ முதலில் சுதந்திரம் பெறுவது எனக்கு அவசியம்.

 

அதன் பின் நான் சுய சார்பு வாழ்க்கை வாழ போகிறேனா? அல்லது அந்த பெரு முதலாளிக்கு சேவை செய்யும் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருப்பேனா? என்பதை என் வாழ்வியல் சூழலை பொறுத்து நான் முடிவெடுப்பேன் என்று அந்த கொத்தடிமை கூறுவானாகில், அது தவறு! நீ இப்படியே அடிமைக்கு அடிமையாய் வாழ்ந்து மடிந்துவிடு!

 

உன் முதலாளியையும் சேர்த்து அடிமை கொள்ளும், பெரு முதலாளி தான் உனக்கு முதல் எதிரி! உனக்கு உன் முதலாளி நல்ல வாழ்க்கை தராவிட்டாலும், உன் வாழ்க்கையை சிதைத்து சீரழித்து இருந்தாலும், உனக்கு எதிரி, உனக்கும், உன் முதலாளிக்கும் பின்னால் இருக்கும் நிழல் முதலாளியான பெரு முதலாளி தானே அன்றி உன் முதலாளி அல்ல என்று கூறுவது சரியானதாக இருக்குமா!

 

இப்படித் தானே வெள்ளையனை வெளியேற்ற இந்திய முதலாளிகள் எங்களை சுதந்திர போராட்டமென்னும் மாய வலையில் சிக்க வைத்து, இன்று எங்களை வெள்ளையனே பரவாயில்லை என்று சொல்லுமளவிற்கு, எங்கள் சுதந்திரத்தை, எங்கள் உரிமையை பறித்து எங்கள் இயற்கையின் வளமையை, எங்கள் தேசத்தின் எல்லையை இழந்து, எங்கள் சகோதரர்களின் உயிரை இழந்து, எங்கள் சகோதரர்களை அண்டை மாநிலங்களில் எல்லை பிரிவினையால் சிறுபான்மையினர்களாக்கி ஏதிலிகளாக வாழ்ந்து வருகிறோம்.

 

எங்கள் வாழ்க்கையை பெரு முதலாளியுடன் கூட்டு சேர்ந்து சிதைத்து, சீரழிக்கும் தேசிய முதலாளிகளின் நலனுக்காகவே பாடுபட்டு நாங்கள் அழிந்து போக, இவர்கள் கூறும் போலி ஜனநாயகத்தின், போலி சுய சார்பை உண்மையென எத்தனை காலம் தான் நம்பி ஏமாறுவது என சிந்திக்க வேண்டியுள்ளது அல்லவா!

 

நிழல் அரசு என்பது ஆண்டான், அடிமை சமுதாயத்திலேயே உருவாகி விட்டது, எனபதை நாம் உணர வேண்டும்.

 

பல நாடுகளை தன் படை பலத்தால் வென்று விடும் அரசன், அதை பரிபாலனம் செய்யும் வேலையை தன் பிரதிநிதிகளை கொண்டு ஆண்டான். அவன் தன்னை பேரரசன் என கூறி கொண்டான். உலகமும் அவனை பேரரசன் என்றே போற்றியது.

 

பல சிற்றரசர்கள், மற்றும் குருநில மன்னர்கள், அவர்கள் ஆண்டு வந்த பகுதிகளுக்கு, பேரரசனுக்கு திரை செலுத்தியே வாழ்ந்தனர். அப்பொழுது பேரரசன் தானே நிழல் அரசு!

 

அப்பொழுதெல்லாம் சிற்றரசர்களும், குருநில மன்னர்களும், அவர்களின் தேசம், தேசிய இனம், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, ஆன்மீகம் போன்றவற்றை கட்டிக் காத்து வளர்த்தெடுக்கவில்லையா!

 

இங்கே ஆள்பவன் என் இனத்தை சேர்ந்தவன் என்பது மட்டும் முக்கியமல்ல. என் இனத்தின் தேசம், தேசிய இனம், அதன் அரசியல், பொருளியல், எல்லை, கலை இலக்கியம், பண்பாட்டின் மீது அக்கறை கொண்டவனும், பற்று கொண்டவனுமே தலைவனாக வர வேண்டும்.

 

அப்படிபட்ட தலைவனை உருவாக்கும் சமூகமாக தமிழ் சமூகம் மாற வேண்டுமானால், தமிழனுக்கு தேசிய இன உணர்வும், மொழி பற்றும் மிக மிக அவசியமானதாகும். அதை பயிற்றுவிக்க பாடுபட வேண்டியது, புரிதல் உள்ள ஒவ்வொரு தனி தமிழனின் கடமையாகும்.

 

அதுவே நம் வருங்கால சந்ததியை விழித்தெழ வைக்கும். இல்லை எனில், நம் வருங்கால சந்ததிக்கு துரோகம் இழைத்தவர்களாகிறோம்.

 

உலகம் முழுவதும் கட்டி ஆண்ட வெள்ளையன் அரசுக்கு என்ன பெயர்? தி கிரேட் பிரிட்டன் என்பது தானே. தி கிரேட் பிரிட்டன் என்றால் பேரரசு என்று தானே அர்த்தம்.

 

பேரரசின் வடிவம் தானே மாறி இருக்கிறது. அது நாகரீகம், அறிவியல் வளர்ச்சியை பொறுத்து வடிவ மாற்றம் பெறுகிறது. ஆண்டான் அடிமை முதல் இன்று ஏகாதிபத்தியம் வரை நிழல் அரசுகளின் மேலாதிக்கம் தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது.

 

ஃப்ரீமேசன் (freemason) மூலம் உலகம் முழுவதையும் கட்டுப்படுத்தும் பதிமூன்று யூத அரச குடும்பங்களின் தலைமை பிரதிநிதியாக கிரேட் பிரிட்டன் இருக்க, எதிரும் புதிருமாக வல்லரசுகளின் போட்டி நடக்கிறது.

 

அந்த வல்லரசுகளுக்கு வளரும் நாடுகள் சேவை செய்ய, மக்களையோ, இன மோதல், நிற மோதல், மத மோதல், குல(சாதி) மோதல் என்றும், ஏகாதிபத்தியம் கூறும் பெண்ணியம், கலாச்சார சீரழிவு, குடும்ப முறையை தகர்த்தல், சிதைத்தல் போன்றவற்றையும் யுத்தத்தாலும், நோயை பரப்புவதன் மூலமும் மக்களை துன்புறுத்துவதும், அன்றாட நிகழ்வாக உள்ளது. இந்த கொரோனாவால் வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளில் தான் மக்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர்.

 

நாடு நூறு ஆண்டுகள் பொருளாதார பின்னடைவை சந்தித்து விட்டதாக ரிசர்வ் வங்கி கவர்னர் கூறுகிறார். பிரதமரோ நாடு கொரோனா யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டதாகவும், பொருளாதாரத்தில் மேம்பட்டு விட்டதாகவும் பெருமைபட்டு கொள்கிறார்.

 

இந்நிலையில் நிழல் அரசுகளின் தயவில் நம் அரசுகள் செயல்படுகிறது என்பதற்காக நம் நியாயமான உரிமைகளை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. உரிமைகளை பெற போராடிதான் ஆகவேண்டும். போராட்டம் வீணாக போகாமல் இருக்க மக்கள் இன உணர்வு கொண்டாக வேண்டும்.

 

அனைத்து அண்டை இனங்களுக்கும், சேர்த்து போராட இயலாது, ஏனெனில் இனங்களுக்குள் பகை வளர்க்கபட்டு விட்டதால், அனைத்து இனங்களுக்குமான ஓர்மையும், வளர் நிலையும், முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.

 

அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், அளவிற்கு இந்த தமிழ் மண்ணில் தேசிய இன உணர்வும் இல்லை. மொழிபற்றும் இல்லை.

 

உலக தமிழர்கள் அனைவருக்கும் இந்த தமிழ்நாடு தான் தாய் மண்ணாகும், இங்கிருந்தே மனித குல நாகரீகம் உலகம் முழுவதும் எடுத்து செல்லப்பட்டிருப்பினும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, அடிமை பட்டதால், சுய மரியாதையை இழந்தவனாகவும், தன் அடையாளத்தை மறந்தவனாகவும், திராவிடம், இந்து என்ற பொய்யான அடையாளத்தில் முகம் பதித்து வாழ்கிறான். அதில் இருந்து தமிழனை வெளி கொண்டு வர வேண்டியது நமது கடமையாகும்.

 

உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வேலையை சர்வ தேச முதலாளிகள் செய்வார்கள். அதுவரை நம் தேசிய இனத்தை ஒன்றிணைக்கும் வேலையை நாம் செய்வோம்.

 

உலக தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள் என்று மார்க்ஸ் கூறினார். ஆனால் உலக முதலாளிகள் சுரண்டலுக்காக ஒன்று சேர்ந்துள்ளனர்.

 

இவர்களே உலக மக்கள் அனைவரையும் ஓர் நாள் ஒன்று சேர்த்து விடுவார்கள். அதுவரை நமக்கு, நம் தேசியம் அவசியமே! அடிமைக்கு அடிமையாய் வாழும் நிலையிலும், நிழல் அரசானாலும் நமக்கு தேசியம் அவசியமே!

 

-தமிழ் தமிழன் (தமிழர் வரலாற்று கழகம் )

சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை.