அரசு ஊழியர்கள் புரட்சி செய்வார்களா ?!

அரசு ஊழியர்கள் புரட்சி செய்வார்களா ?!

 


முறையமைக்கபட்ட பாட்டாளிகளே புரட்சிக்கு தலைமை தாங்கி நடத்தி செல்வார்கள் என்பதும், உதிரி பாட்டாளி வர்க்கம் புரட்சிக்கு தலைமை தாங்க தகுதி அற்றதும், வாய்ப்பற்றதும் ஆகும். உதிரி பாட்டாளிகளுக்கு சமூக பொறுப்போ போதுமான அரசியல் அறிவோ, விழிப்புணர்வோ, அக்கறையோ, தலைமை தாங்கும் தகுதியோ, எதிர் கால திட்டமோ இருக்காது என்பது புரட்சி பேராசான் சமூக அறிஞன் லெனின் அவர்களின் கண்டுபிடிப்பாகும்.

 

 

ஆனால் உண்மையில், நம் நாட்டில் அவ்வாறு எதிர் பார்க்கலாமா ! அது சரியா ! என்று பார்த்தால் லெனினின் பார்வை இங்கு பொய்த்து போனதென்றே எடுத்து கொள்ளவேண்டியிருக்கிறது.

 

 

முறையமைக்கப்பட்ட பாட்டாளிகள் என்று நம் நாட்டில் கூறுவதென்றால், அரசு ஊழியர்களை தான் கூற வேண்டும். அவர்கள் தான் முறையான, நிலையான வருமானம், வாழ்வியல், அரசியல் பார்வை, அரசை நிர்பந்தித்து சாதித்துக்கொள்ளும் திறன், போராட்ட வடிவத்தில் ஒற்றுமை என்றெல்லாம் முறையாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் இருந்து மக்களின் அடிப்படை போராட்டங்களுக்கு தலைமை கிடைக்குமா ? இதுவரை கிடைத்ததா ? என்றால், இல்லை ! என்றே நமக்கு பதில் கிடைக்கிறது.

 

 

வர்க்க அரசியல் இங்கே இப்பொழுது பொய்த்து போய் கிடக்கிறது.

 

 

காரணம் முறையமைக்கப்பட்ட பாட்டாளிகள் இன்று நம் கண் முன்னே சொகுசு பாட்டாளிகளாக வாழ்ந்து வருகிறார்கள். 98% மக்கள் தினசரி ரூபாய் 100 முதல் ரூபாய் 500 வரை சம்பாதிக்க ரத்த வேர்வை சிந்திக்கொண்டு இருக்கும் வேளையில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 1500 முதல் ரூபாய் 3000 மும் அதற்கு மேலும் மென்மையான வேலையை செய்து அரசு மூலம் ஊதியம் பெற்று வருகிறார்கள்.

 

 

மக்களுக்கு சேவை செய்ய அமர்த்தப்பட்ட இவர்கள் முடிந்த வரை அரசின் திட்ட பணிகளில் வாய்ப்பு தேடிவரும் பயனாளிகளிடமிருந்து குறைந்த பட்சம் 10% முதல் 50% வரை கையூட்டு பெற்றுக்கொண்டே வேலை செய்கிறார்கள். பல இலட்சம் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கும் அரசு ஊழியர்களுக்கோ போட்ட பணத்தை நூறு மடங்கிற்கும் மேலாக ஓய்வு பெறுவதற்க்குள் சம்பாதித்தாக வேண்டும் என்கின்ற வெறி !

 

 

இவர்கள் வாழ்வில் செய்த செயல்களை கண்ணுற்றோமானால், முதலில் குடும்ப ஒற்றுமையை, குடும்ப அமைப்பை சிதைத்தவர்கள் இவர்கள் தான். தன் வருமானத்ததில் தாயோ, தந்தையோ, சகோதரனோ, சகோதரியோ உதவி கோராமல் இருக்க தேவையான குடும்ப அரசியலை இரக்கமின்றி அரங்கேற்றியவர்கள் இவர்களே. நேற்று வரை ஒற்றுமையாய் இருந்த ஒரு குடும்பம் இன்று சுக்கு நூறாய் போய்யிருந்தால், அங்கே ஒரு அரசு ஊழியர் இருப்பார். அவரால் அக்குடும்பம் சிதைந்திருக்கும். இவர்கள், தான் அரசு ஊழியராக இருப்பதை தன் திறமை என்று போற்றி கொள்வார்கள்.

 

 

ஒரு அரசு ஊழியரை இன்னொரு அரசு ஊழியர் மணம் புரிந்து கொள்வதன் மூலம் இரண்டு வழியில் அரசு வேலையின் மூலம் மக்கள் வரி பணத்தையும், செய்யும் வேலைக்கான கையூட்டையும் பெற்று, கொள்ளை இலாபம் பார்ப்பவர்கள். இவர்களை இன்றே வேலையை விட்டு நீக்கி விட்டால் நிச்சயம் பிச்சை எடுக்க போவதில்லை !

 

 

சாதாரன மக்களை அலட்சியமாக நடத்துவதும், பார்ப்பதும் இவர்களின் பண்பு. அப்பாவி மக்களிடம் இவர்களின் பணத்தை அநியாய வட்டிக்கு தருவது, உயர் தர மதுபானங்கள் வாங்கி பருகுவது, அவரவர் தகுதிக்கு ஏற்ப அந்தஸ்த்துள்ள விடுதிகளில் தங்கி சுக போகங்களை அனுபவிப்பது, சொத்துக்கு மேல் சொத்துக்கள், பல வீடுகள் வாங்குவது, மொத்தத்தில் மக்களென்றால் தாங்கள் மட்டும் தான் மக்கள் என கருதுவது இவர்களின் பண்பாகும். இவர்கள் அரசின் கீழ் ஒரு குழு கூட்டமைப்பை கொண்டிருப்பதால் அடிக்கடி அரசை ஸ்தம்பிக்க வைத்து, நெருக்கடிக்கு உள்ளாக்கி நினைத்ததை சாதித்து கொள்ளும் உயர் தர உதிரி பண்பாடு கொண்ட கூட்டமாகும்.

 

 

சமூகத்தில் உதிரி பாட்டாளியிடமிருந்து இவர்கள் வருமானத்தில் வேறு படுகிறார்களே தவிர, பண்பாட்டில் உதிரி தொழிலாளர்களுக்கு இவர்களொன்றும் சளைத்தவர்கள் அல்ல. சமூகம் குறித்தோ அடுத்த தலைமுறைகள் குறித்தோ யாதொரு அக்கறையுமில்லாதவர்கள் !

 

 

சோசலிச சமூக விஞ்ஞானி புரட்சியாளன் லெனின் கண்டறிந்த முறையமைக்கப்பட்ட பாட்டாளியின் மகத்துவத்தை முதலாளித்துவம் சொகுசு வாழ்வியலுக்குள் பழக்கி விட்டபடியால் லெனின் கண்டுபிடிப்பு பொய்யாகி போனது.

 

 

அரசு ஊழியர் எவரையும் சாமானியன் நல்லவன் என்று கூறப் போவதில்லை. மக்களின் நம்பிக்கையை இழந்த கூட்டமே அரசு ஊழியர்கள் ! இவர்களை போல இவர்களின் பிள்ளைகளுக்கும் அரசு வேலை கிடைக்கும் என்று உத்திரவாதம் இல்லை ! என்பதை உணர்ந்து இனி மேலாவது, அரசு தரும் சம்பளமே போதுமென உணர்ந்து சாமானிய மக்களிடம் கையூட்டு பெறாமல், மக்கள் சேவையே மகத்தான சேவையென ஊழியம் செய்து, மக்களின் நம்பிக்கையை பெற்று சமூகத்தை நேர் வழியில் அரசு ஊழியர்கள் நடத்தி செல்வார்களேயானால் சமூகத்தின் அங்கமான அவர்களின் வாரிசுகளுக்கும் வரும் காலத்தில் நன்மை ஏற்படும் ! ஏற்படட்டும் ! லெனின் சித்தாந்த பார்வை உயிர் பெறட்டும் !

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக