லிவ்விங் டூகெதர் (living together) !

லிவ்விங் டூகெதர் (living together)!

 


குடும்ப அமைப்பின் கட்டுப்பாடுகள் தனிப்பட்ட சுதந்திரமான சுவாதீனத்திற்கு இடையூறாக இருப்பதாக கருதி, தேவைக்கு வாழ்ந்து பார்ப்பது என்கின்ற புதிய ஆதாரமற்ற நவீன குடும்பம் போல் ஒரு கட்டமைப்பை செய்து பார்த்துக் கொண்டிருப்பது லிவ்விங் டூகெதர்.

 

 

நம் தமிழ் சமுகத்தில் இல்லாத வாழ்க்கை முறையாதலால், எல்லோரும் தன் விருப்பம் போல் அதற்கு தமிழில் பெயரிட்டு கொள்கிறார்கள்.

 

 

இது குடும்ப அமைப்பின் வளர்ச்சி நிலை என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஏகாதிபத்திய நுகர்வு பண்பாடானது, பாலியலை நுகர்வு இச்சையாக மட்டும் மாற்றி இருக்கிறது. இது தலைமுறை உற்பத்தியை தடுத்து, உதிரிப் போக்கை விதைத்து, சுய நலத்தை போற்றுகிறது. சமுதாய கடமையாற்றும் பண்பிலிருந்து விலக்கி வைக்கிறது. குடும்ப அமைப்பை கேள்விக்குள்ளாக்க நகர்வு கலாச்சாரம் கொண்டு வந்துள்ள சவாலாகும். இது ஆணானவன் பெண்ணிடம் எதிர் பார்க்கும் ஒழுக்கம், கற்பு, நேர்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. தனக்கு மட்டுமே சுதந்திரம் என்று எண்ணி வாழ்ந்து வந்த ஆண் வர்க்கத்தை சிந்திக்க வைத்திருக்கிறது.

 

 

இருப்பினும் அரசு கட்டமைப்பானது ஆண்ணாதிக்க பண்புகளை கொண்ட கட்டமைப்பானதால், பெண்வர்க்கம் மாற்றி அமைக்கும் எவ்வித பண்பாட்டு விடயங்களும் ஆண்வர்க்கத்தின் நுகர்வில் லாபமாகவே போய் முடிகிறது.

 

 

பெண் ஒழுக்கத்தை கடைபிடித்தாலும், கூடா ஒழுக்கத்தை பின் பற்றினாலும் முதலாளித்துவ ஜனநாயகத்தில் வெற்றியாளர் ஆணாகவே இருக்கிறான்.

 

 

மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடன் கள்ள உறவு கொண்டு சேர்த்து வைத்திருப்பது, கணவனுக்கு தெரியாமல் மனைவி வேறு ஒரு ஆணுடன் கள்ள உறவு கொண்டு சேர்ந்து இருப்பது என்கின்ற ரகசிய கள்ள பாலுறவு நம் சமுகத்தின் இயல்பு போக்கில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற, கூடா ஒழுக்கம் என பார்க்கப்படும் பண்பாடானது, மற்றொரு வடிவமாக இன்று இளம் ஆண் பெண்களில் சிலரிடம் இக்கலாச்சாரம் பரிணமித்திருக்கிறது.

 

 

இது பெரும்பாலும் ஆணும் பெண்ணும் கலந்துறவாடும் தொழில்களில் நீண்ட காலம் தொன்று தொட்டு இருந்து வருகின்ற பண்பாடுதான். குறிப்பாக சினிமா துறையில் இருப்பதாக பரவலாக நம்பப்பட்டு வந்த இந்த பாலியல் விடயங்கள், இன்று கார்ப்பரேட் நிறுவனங்களிலும், தகவல் தொழில் நுட்ப துறைகளிலும் இளம் ஆண் பெண்கள் மத்தியில் புதிய பரிணாமம் எடுத்திருக்கிறது.

 

 

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரே வீட்டில் மண உறவு இன்றி சேர்ந்து வாழ்வதும், சேர்ந்து வாழும் ஆண் பெண் இருவரும் பால் உறவை மையப்படுத்தி இன்பம் துய்ப்பதும், மற்ற நேரங்களில் ஒருவர் மற்றவர் குறித்து அக்கறையற்று இருப்பதும், அந்த அக்கறையற்ற நேரங்களில் வேறு ஒருவருடன் அதே வீட்டிலோ அல்லது வேறு ஒரு இடத்திலோ பாலுறவு கொள்வதும், இப்படி இரண்டு, மூன்று, நான்கு என தன்னுடன் சேர்ந்து வாழும் நபரின்றி, வேறு நபர்களுடனும் உள்ள உறவை பற்றி சேர்ந்து வாழும் இருவரும் அக்கறையற்று இருப்பதும், வறைமுறையற்ற புணர்ச்சிக்கு வித்திடுகிறது.

 

 

இன்று இவன் அல்லது இவள் நாளை வேறு ஒருவன் அல்லது ஒருத்தி என இன்பம் துய்ப்பது பழைய குழு மணவடிவத்தில் அல்லது பலதார மற்றும் பல கணவர் மண வடிவத்தின் சாயலாக புதிய வடிவம் எடுத்திருக்கிறது எனலாம். இருப்பினும் பல கணவர் மற்றும் பலதார மண வடிவில் புதிய தலைமுறைகள் உற்பத்தி செய்யப்பட்டன குழந்தைகளின் தந்தையை தாய் தான் அடையாளம் காட்ட வேண்டும். இவ்விதமான மகபேறு, சுமையாகி விடும் என்பதாலும் சுதந்திரமான சுகத்திற்கு தடையாகும் என்பதாலும் அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்தி மகப்பேறு இன்றி தொடர்ந்து பல ஆண், பல பெண் பாலுறவில் தொடர்ந்து இன்பம் துய்க்கிறார்கள் எனலாம்.

 

 

இதில் ஈடுபடும் பெண்கள் புதிய வாழ்வியல் கண்டு விட்டதாக பூரிப்படைகின்றனர். ஆனால் ஆண் மணவாழ்க்கைக்கு முன் இதை ஒரு பயிற்சி களமாகவே பார்க்கிறான்.

 

 

இவ்வாழ்கை வாழ்ந்த ஆண் ஒருவனை பெண்ணானவள் வருமானம், பொருளாதாரம், சொத்து போன்ற முக்கிய காரணங்களுடன் வறைமுறையற்ற புணர்ச்சியை விரும்பாத பெண் கூட மணந்து கொள்ள முன் வருகிறாள். ஆனால் இவ்வாழ்க்கை வாழ்ந்த பெண்ணை மணந்து கொள்ள எந்த ஆணும் முன் வருவதில்லை. அப்படி ஒரு வேலை பெண் மண வாழ்க்கையை யாருடனாவது அமைத்து கொள்வாளாகின் அது நீண்ட நாட்க்கள் நிலைப்பதில்லை.

 

 

இப்பொழுது படித்த இளம் வயது பெண்களிடமும், அவளின் பெற்றோர்களிடமும் ஒரு வித பேராசை இழையோடி இருக்கிறது. அது என்னவென்றால் தன்னை மணக்கும் ஆணுக்கு சொந்த வீடு, கார், வங்கியில் இருப்பு பல லட்சங்கள் இருக்க வேண்டும். தாங்கள் கொண்டு வரும் சொத்து நகைகள் மீது கணவன் உரிமையோ, விருப்பமோ கொண்டிருக்கக்கூடாது. மாமனார், மாமியார், நார்த்தனார் போன்ற உறவுமுறைகள் அருகில் இருக்கக்கூடாது. தனித்து வாழவேண்டும். ஆணுடைய உறவுகளுக்கு அப்பாற்பட்டும், பெண்ணுடைய உறவுகள் அதிக ஆதிக்கம் செலுத்த வகை செய்யும் பண்பு கொண்டு, மணமகன் தேடும் போக்கு இச்சமுகத்தில் ஒருபுறம் வளர்ந்து வருகிறது.

 

 

இதற்கு சாட்டை அடி கொடுக்கும் வகையில் லிவ்விங் டூகெதர் வாழ்க்கையில் சலிப்படைந்த அல்லது போதும் என கருதும் புத்திசாலி பெண்கள் தங்களை மணக்க ஆண்கள் முன் வருவதில்லை என்பதை உணர்ந்து புதிய முறையை பின்பற்ற துவங்கியுள்ளனர். அதுதான் வீட்டு கணவர் முறை (house husband). ஆண் பெண்ணை வேலைக்கு அனுப்பாத வீட்டு மனைவியாக (house wife) ஏற்பது போல், படித்து, படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத, நிரந்தர வேலையில்லாத அல்லது தொழில் இல்லாத ஆண்களை வீட்டு கணவனாக அடைய முன் வருகிறார்கள். இதை அப்பெண்ணின் பெற்றோர்களும் மனமுவந்து மணம் செய்து வைக்கிறார்கள்.

 

 

குறைந்த பட்சம் படிப்பு, சொத்துள்ள பெண்கள் போடும் நிபந்தனைகளுக்கு பக்கத்திலேயே, நிபந்தனையற்ற முறையில் வீட்டு கணவனை அடையும் லிவ்விங் டூகெதர் வாழ்க்கை வாழ்ந்து அந்நியப் பட்ட பெண்ணும் இருக்கிறாள்.

 

 

குடும்ப அமைப்பே அரசின் கடைசி வடிவமாக இருக்கின்றபடியால், ஏக போகம் நுகர்வு கலாச்சாரம் மூலம் என்ன தான் சமூதாயத்தை சிதைக்கும் போக்கை செயல்படுத்தினாலும் கெட்டு சீரழிந்த்வர்கள் இறுதியில் வந்தடையும் இடம் குடும்ப கட்டமைப்பாகத் தான் இருக்க முடியும்.

 

 

தனக்கான அரசியலை தீர்மானிக்கும் பயிற்சியும், அறிவும், போராட்ட குணமும் குடும்பத்தை முறையாக முன்னெடுக்கும் ஒருவருக்கே கிடைக்கிறது. குடுப அமைப்பை முன்னேறி செல்வதை, மேம்படுத்துவதை விட்டுவிட்டு ஏகாதிபத்தியத்தின் நுகர்வு கலாச்சாரத்தில் உதிரிகளாகி போன இந்த சுதந்திர பாலியல் நுகர்வு என்னும் கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தறுதலைகள் !. இந்த லிவ்விங் டூகெதர், ஏக போகம் குடும்ப பண்பாட்டின் மீது பரப்பி விட்ட நோயாகும். இந்த நோயால் அதிகம் நீர்த்து போகிறவர்கள் பெண்களே !.

 

 

நம் தமிழ் சமுகம் எதிர் கொண்டிருக்கும் இன ஒடுக்கு முறைக்கு எதிராக சிந்திக்க வேண்டிய இளைஞர்கள், முதலாளித்துவத்தால் பண்பாட்டுச் சீரழிவுக்கு உள்ளாக்கப்பட்டு பயனற்ற வாழ்க்கையை நோக்கி திசை திருப்பப்படுகிறார்கள்.

 

 

லிவ்விங் டூகெதர், நம் தமிழ் சமுகத்தில் குடும்ப அமைப்பு என்னும் சமுத்திரத்தில் அதிகார வர்க்கம் உருவாக்கும் அதிர்வலைகளே ! இவ்வதிர்வால் குடும்ப சமுத்திரத்தில் சுனாமி ஏற்படலாம் ! ஆனால் சமுத்திரம் அழிந்து போகாது !.

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக