மாற்று மத தமிழர்களும் பொங்கல் விழாவும்

மாற்று மத தமிழர்களும் பொங்கல் விழாவும்

 


 

                                   முன்பெல்லாம் பொங்கல் பண்டிகை வந்து விட்டால், தமிழகத்தில் வாழும் அனைவரும் மதம், இனம் தாண்டி தமிழர்களின் வாழ்வியலோடு பிண்ணி பிணைந்த அனைத்து மக்களும் கொண்டாடி வந்தனர்.

 

 

                                   இப்பொழுதும் அனைத்து தமிழக மக்களுக்கும் இன்ப விழாவான பொங்கல் விழாவை கொண்டாடிவரும் வேளையில், இந்து மத அடிப்படைவாதிகளும் , இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளும் தமிழனின் ஒரே விழாவான பொங்கல் பண்டிகையை சிக்கலுக்குள்ளாக்குகிறார்கள், இந்துத்துவவாதிகள் தமிழர்களை நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடவிடாமல் சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதிகளோ குழப்பத்தை விளைவிக்கிறார்கள். மொத்தத்தில் இந்த இருவருக்கும் ஒரே நோக்கம் தான் ! தமிழனின் பண்பாட்டை சிதைப்பது ஒன்று தான் நோக்கமாகும் !

 

 

                                   இந்துத்துவவாதிகளை பொருத்தவரை தமிழன் இந்து ! பொங்கல் பண்டிகையை இந்துக்கள் பண்டிகையென்றும், முஸ்லிமோ, கிறித்துவனோ கொண்டாடக்கூடாது என்கிறார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதிகளோ பொங்கல் சூரியனை வழிபடும் பண்டிகை என்றும் அது பல தெய்வ வழிபாட்டையும் கொண்டுள்ளது. நாங்களோ ஓர் இறை கொள்கை உடையவர்கள், எனவே இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட கூடாது என்கிறார்கள்.

 

 

 

                                  அதிகாரமற்ற தமிழனின் பண்பாட்டுத்தளம் தான் இந்த இரு மதங்களுக்கும் விளையாட்டுத்தளம் ஆனது. விவசாயக் குடும்பத்தின் அங்கத்தினரான மாட்டை வீட்டு விலங்கல்ல ! என்று காட்சி விலங்கு பட்டியலில் சேர்த்து தமிழனின் பண்பாட்டில் சிக்கலை உருவாக்கி, அதிகாரத்தால் தமிழனை நிலை குலைய செய்வது, தமிழனை இந்து மத பட்டியலில் சேற்த்துவிட்ட்டதால், இந்துவாக வாழ விருப்பமில்லாமல் மாற்று மதத்திற்கு மாறியவர்களை தமிழர்கள் அல்ல என்று புறந்தள்ளி சர்ச்சையை கிளப்புவது இந்து அடிப்படைவாதிகளின் வேலையாய் இருக்கிறது.

 

 

                                   இது தான் நல்ல சந்தர்ப்பம் என தமிழ் முஸ்லிம்களை தமிழர்களிடமிருந்து அன்னியப்படுத்தி, அடையாளமற்றவர்களாக்கி நாம் தமிழர்களா ! இல்லை வேறு ஏதாவது நமக்கு உண்டா ! என்கின்ற மிகப் பெரும் குழப்பத்தை உண்டாக்குவதன் மூலம் தமிழ் முஸ்லிம்களை ஏதிலிகளாக்குவது இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வேலையாய் இருக்கிறது.

 

 

                                  ரோமன் கத்தோலிக்க கிறித்துவ மதத்தை பொறுத்தவரை இது போன்ற தகிடுதத்த வேலைகளை செய்வதில்லை. அது ஏகாதிபத்தியத்தின் மதமாக பரிணமித்து விட்டபடியால் ஆளுமை போட்டிக்காக இந்திய மண்ணில் சல்லித் தனமான, சில்லரைத் தனமான  அரசியல் செய்ய வேண்டிய அவசியம் அதற்கு ஏற்படவில்லை. கிறித்துவர்கள் கணிசமாக வாழும் நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களில் எல்லாம் கிறித்துவ புனிதர்களான அந்தோணியார், செபஸ்த்தியார், சவேரியார் போன்றவர்களுக்கு ஆலயம் கட்டி வழிப்பட்டு வருகிறார்கள். அங்கெல்லாம் தை மாதம் பிறந்துவிட்டால் தை மாதம் முடிவதற்குள் விழா கமிட்டி கூடி தைக்குள் ஒரு நாளை தெரிவு செய்து பொங்கல் விழா கொண்டாடி தமிழனின் பாரம்பரிய பண்பாட்டை நிறுவுகிறார்கள். கும்பிடும் தெய்வம் தான் வேறேயொழிய, தமிழன் பண்பாட்டை நிலை நிறுத்தி விடுகிறார்கள். சல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்றவையும் நடத்தி திருவிழாவை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

 

 

                                  தமிழ் இஸ்லாமியர்களும் அல்லாஹ் வை வணங்கி பொங்கல் வைத்துக் கொண்டாடினால் இல்லை,இல்லை ! சூரியனை வழிப்பட்டால் தான் பொங்கல் விழா சரியானது ! இல்லையென்றால் அது பொங்கல் விழாவே அல்ல என்று யாரும் கூறப் போவதில்லை.

 

 

                                   இன்னும் கிராம புறங்களில் தமிழ் இஸ்லாமியர்கள் மதமற்ற தமிழர்களோடு கலந்து பொங்கல் விழா கொண்டாடத்தான் செய்கிறார்கள். அவர்களையும், அவர்களின் வாரிசுகளையும் தவ்ஹீது என்ற பெயரால் தூய இஸ்லாம் பேசி குழப்பம் விளைவிக்கிறார்கள் இந்த வகாபிஸ்ட்டுகள் ! (ஏகாதிபத்திய தலைமையால் உருவாக்கப் பட்ட சவுதி அரேபியாவைச் சேர்ந்த அடிப்படை இஸ்லாமியவாதியின் பெயர் தான் வகாபி).

 

 

                                  தமிழனின் சூரிய வழிப்பாட்டை குறை கூறி பொங்கல் தினத்தை மறுதலிக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் உள்ள அடுமனைகளை மாற்றி அமைக்கட்டும். அனைத்து இஸ்லாமியர் வீடுகளிலும் சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு திசைகளில் தான் அடுப்பங்கரையை கட்டி வைத்துள்ளர்கள். சூரியன் உதிக்கும் திசையில் தினசரி சமையல் செய்து சாப்பிட்டு வருகிறார்கள்.

 

 

                                   தமிழ் இஸ்லாமியர்களுக்கு எங்களின் வேண்டுகோள் என்ன வென்றால் வணக்கம் செய்வதற்கு உங்களுக்குப் பிடித்த ஓர் இறைவனையே வணங்குங்கள். அதே நேரம் நம் தொன்மையான பாரம்பரிய பண்பாட்டையும் கடை பிடித்து வாருங்கள்.

 

 

                                   அரேபியப் பண்பாடு நமக்கானதல்ல ! ஒரு மதம் எங்கிருந்து உருப்பெற்றதோ அது தன் அரசியல், பொருளாதார மேட்டுமை தன்மையை நிறுவ, அது தன் பண்பாட்டை அந்த சமூகத்திடம் திணிக்க முயற்சிக்கும் என்பதே உண்மை. அப்படித்தான் இந்துத்துவமும் ! இஸ்லாமும் !

 

 

                                   இஸ்லாத்தில் சாதி இல்லை என்பார்கள் ! ஆனால் வட இந்தியா முழுவதும், ஏன் ? திராவிட மாநிலங்களான தெலுங்கு, கன்னட, மராட்டிய, மலையாள மாநிலங்கள் உட்பட இந்து மதத்தில் உள்ள அனைத்து சாதிகளும், தீண்டாமையும் அப்படியே இஸ்லாத்திலும் உள்ளது. தமிழகத்தில் மட்டும் இவர்களால் புனையப்பட்ட சாதிப் பிரிவினைகள் இருக்கிறது. ஆதலால் தமிழ் முஸ்லிம்கள் உண்மை அடையாளங்களை தொலைத்துவிட்டு வாழ்கிறார்கள். இதைத்தான் இவர்கள் இஸ்லாத்தில் சாதி இல்லை என்கிறார்கள். இது பற்றி விரிவாக பின் வரும் கட்டுரைகளில் தெளிவாக விவரிக்கிறேன்.

 

 

                                  நாம் அனைவரும் சாதி, மதம் கடந்து நம் தொண்மையும், பாரம்பரியதுமான தமிழ் பண்பாட்டை காத்து, தித்திக்கும் இனிமையான பொங்கல் திருநாள் சிறக்க உலகத்தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எங்களின் பொங்கல் தை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

“ தமிழ் மொழிக் காப்போம் ! தமிழர் பண்பாட்டை உயர்த்துவோம் ! தமிழர் விரோத சக்திகளை முறியடிப்போம் ! “

 

 

-தமிழர் வரலாற்று கழகம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக