தமிழும் ! இசையும் !!

 

தமிழும் ! இசையும் !!

 


 

                   கல் தோன்றி மண் தோன்றா காலத்தே ! மூத்தக்குடி தமிழ் குடி என நம் இலக்கிய சான்றும், வரலாற்று சான்றும் மெய்பிக்கின்றன. கடல் கொண்ட குமரி கண்டத்தில் பல்வேறு திணை வாழ்வைக் கொண்டு, நாகரிகம் படைத்தது தமிழ் இனம். மொழியோடு, இசையும் சேர்ந்தே வளர்ந்தது தான் நமது நாகரிகம். ஐந்திணைகளின் பண்பாட்டின் இசையானது ஒருங்கே அமைந்ததுதான் பண்டைய தமிழ் இசையாகும்.

 

 

                  குமரி கண்டத்தில் மனித குலம் பேசிய மொழி தமிழ் மொழியாகும். தமிழன் குரலோசையுடன் அவன் பண்பாட்டு இசையும் சேர்ந்தே வளர்ந்தது. ஐவகை திணை வாழ்க்கையை கொண்டது தமிழ் இனம், ஐவகை பண் இசையின் தொகுப்பே தமிழ் இசையாகும். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் குறிஞ்சிபாணி பண்ணின் இன்றைய பெயர் மத்தியமாவதி, முல்லை பாணி பண்ணின் இன்றைய பெயர் மோகனம் மருத பாணி பண்ணின் இன்றைய பெயர் சுத்த தன்யாசி நெய்தல் பாணி பண்ணின் இன்றைய பெயர் இந்தோளம், பாலை பாணி பண்ணின் இன்றைய பெயர் சுத்த சாவேரி என்றும் நம் தமிழ் இசை ஆய்வாளர்கள் நிருவுகின்றனர்.

 

 

                   இசை ஆய்வாளர்களில் முன்னோடியானவர் தஞ்சை திரு.ஆபிரகாம் பண்டிதர் ஆவார். இசை நுணுக்கங்களை பற்றி அரிய ஆரம்ப வயதிலிருந்தே தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்தவர். பழங்ககாலத்தின் பண் ஆளத்தி முறைதான், தற்போதைய இராக ஆலாபனை முறைக்கு ஆதாரம் என்பதை பல்வேறு ஆதாரங்களின் மூலம் நிருவியவர் திரு.ஆபிரகாம் பண்டிதர் ஆவார். அவர் எழுதிய கருணாமிருத சாகரம் என்ற நூலே, இன்றைய கர்நாடக இசை மரபுக்கு, மூலமே, தமிழ் இசைதான் என்பதை நிருவியிருக்கிறது.

 

 

                   முதல் கழக நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை ஆயினும் ! நமக்கு கிடைத்த முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இடை கழகத்தில் தொகுக்கபட்ட இலக்கண நூல் ஆயினும், அதில் இருந்தே முதல் கழக வாழ்வியல், பண்பாடு, இசை ஆதாரங்களை அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் தேர், வாழ், வில், வேல் ஆகிய படைக் கலன் பற்றியும், யானை, குதிரை ஆகிய விலங்குகளை பயன்படுத்தியதை பற்றியும், யாழ், முழவு போன்ற இசைக் கருவிகளை பற்றியும் குறிப்புகள் அறியப்படுகிறது.

 

 

                  தமிழர்களின் இசைக் கலை, கூத்து பற்றிய செய்திகளையும் இசை பற்றிய நுணுக்கங்களையும் அறிந்து கொள்ளும் சிறந்த காப்பிய நூல் சிலப்பதிகாரமாகும். பழங்காலத்து இசை கருவிகளையும், இசை நுணுக்கத்தையும் அறிந்து கொள்ள உதவும் சிறந்த காப்பியம் ஆகும். தமிழனை நான் தமிழன் என நெஞ்சை நிமிர்த்த செய்யும் மூல காப்பியம் சிலப்பதிகாரமாகும். எனவேதான் ஈ.வெ.ரா. சிலப்பதிகாரத்தின் மீது இளிவான தாக்குதலை தொடுத்தார்.

 

 

                    இலக்கு + இயம் = இலக்கியம் அதாவது ஒரு சமுகத்தின் வாழ்வியல் இலக்கு எதை நோக்கியது என்பதை இயம்புதல் (சொல்லுதல்) இலக்கியம் எனப்படுகிறது. கழக காலத்தில் தமிழ் இசை சிறப்புற்று விழங்கியதை கழக இலக்கியங்கள் ஊடாக அறிய முடிகிறது.

 

 

                  முதல் கழகம் கண்ட குமரிக்கண்டம் கடல் கொந்தளிப்பால் மூழ்கிய பின் கிழக்குக் கரையில் கபாடபுரத்தை தலைநகராக கொண்டு வென்தேர் செழியன் என்னும் பாண்டிய மன்னன் இடைத்தமிழ் கழகத்தை நிருவினான். அகத்தியம் மற்றும் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் தொகுக்கப்பட்டன. கடல் கொந்தளிப்பால் குமரிக்கண்டம் மூழ்கியதையடுத்து இடம் பெயர்ந்த தமிழினம் புவியில் சிந்து வெளி, சுமேரிய, மாயன் மற்றும் எகிப்திய நாகரிகங்களை தோற்றுவித்தனர்.

 

 

                  கி.மு.2500-2000க்குள் மீண்டும் ஒரு கடல் கொந்தளிப்பு ஏற்பட கபாடபுரமும் அழிந்தது. ஈழம், நாவலந்தீவின் பெரும் நிலப்பரப்பில் இருந்து பிரிந்தது. அதன் பின் இன்றைய மதுரைக்கு கிழக்கே மணவூரில் பாண்டியர்கள் தலைநகரை நிருவி சில நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்து பின் இன்றைய மதுரைக்கு தலைநகரை மாற்றியதாக திரு.தேவநேய பாவாணர் இலக்கிய சான்று பகர்கிறார். அன்று அவர் பகர்ந்த இலக்கிய சான்று இன்று நிருபனம் ஆகி இருக்கிறது. மணவூர் என்பது மருவி இன்று மணலூர் ஆனது. இன்று மதுரையில் மணலூரை சேர்ந்த கீழடியில் தொல்லியல் துறை ஆய்வு செய்த போது சுமார் கி.மு.2500 ஆண்டுகளுக்கும் பழமையான பாண்டியனது தமிழர் நாகரீகம் கண்டறியப்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

 

 

                   நம் இலக்கியங்களில் வரலாற்றின் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அவை அனைத்தும் கண்டறியப்படும் பொழுது நிருபனம் ஆகின்றன.

 

 

                    ஆரிய பிராமணர்கள் தமிழகத்துக்குள் புகுந்து வேள்வி முறை வழிபாட்டை ஊக்குவித்து தமிழ் மன்னர்களை மடைமாற்றம் செய்து அரசிடமிருந்து நிலங்களை தானமாக பெற்றனர். இதனால் மக்கள் நிலமற்றவர்களாகும் நிலை ஏற்பட்டது. இந் நிலையில் தமிழகத்தின் எல்லைபுறங்களில் இருந்து வேளிர்களும், குறுநில மன்னர்களும் ஒன்று சேர்ந்து களப்பாலன் என்பவன் தலைமையில் போரிட்டு மூவேந்தர்களையும் வீழ்த்தி களப்பிரர் ஆட்சியை நிறுவி, தமிழகம் பல்வேறு பகுதிகளாக பிரித்து ஆளப்பட்டு வந்தது. களப்பிரர் ஆட்சியில் மக்களின் அரசியல், வாழ்வாதாரம் குறித்து அதிகம் அக்கறை காட்டப்பட்டது. ஊன் உண்பது, மது அருந்துவது, பரத்தையரோடு இன்புற்று கழித்திருப்பது, களவொழுக்கத்தில் ஈடுபடுவது போன்ற செயல்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டு ஒழுக்கம் பேணப்பட்டது. நல்லொழுக்கம் சார்ந்த இலக்கியங்கள் படைக்கப்பட்டன. நீதி நெறி, நன்னெறி நூல்கள் படைக்கப்பட்டன. ஆசிவகம் என்னும் சமணம் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றது. களப்பிரர்கள் காலம் தமிழர்களின் அரசியல் வாழ்வியலுக்கு பொற்க்காலம். ஆனால் பிராமணர்களுக்கு இருண்ட காலம். இந் நிலையில் இசை முக்கியத்துவம் இழந்தது.

 

 

                   அதன் பின் களப்பிரர் காலம், மங்க துவங்கிய பின் கி.பி.5-ம் நூற்றாண்டில் இசையானது பக்தி இயக்கங்களின் வாயிலாக வளர துவங்கியது. ஏறக்குறைய 7-ம் நூற்றாண்டுக்குள் சைவமும், வைணவமும் போட்டிப்போட்டு தமிழர்களிடையே செல்வாக்கு பெற்றன. ஆசிவகம் என்னும் சமணம் வீழ்ச்சியுற்றது. நாயன்மார்களின் தேவாரங்கள், ஆழ்வார்களின் பிரபந்தங்கள் ஊடாக தமிழ் இசை வளர்ச்சி பெற்றது.

 

 

                   கி.பி.14-ம் நூற்றாண்டில் டெல்லி சுல்த்தான் தமிழகத்தை ஆக்கிரமித்ததை தொடர்ந்து தமிழகத்தின் கோயில்கள் பல இடிக்கப்பட்டன. தமிழர்களின் கலைகள் நலிவுற்றன. இதுவும் தமிழ் இசைக்கு ஏற்பட்ட இரண்டாவது பின்னடைவு எனலாம்.

 

 

                   இந்நிலையில் வடுக விஜய நகர பேரரசு தமிழகத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. அது கோவில்களுக்கு ஆதரவு தந்தது, என்றாலும், தமிழிசைக்கு ஆதரவு தரவில்லை. அதற்கு மாறாக, தெலுங்கு மொழிக்கும், இசைக்கும் ஆதரவு தந்தார்கள். தமிழ் புலவர்கள் நாயக்க மன்னர்களால் ஆதரிக்கபடாத காரணத்தால், தமிழ் புலவர்களால் வளமான காப்பியங்களையோ, தரமான இலக்கியங்களையோ படைக்க முடியவில்லை வாழ்வுக்கு வழியின்றி துன்புற்ற நிலையில், தங்களின் வறுமையை போக்க, தனி மனிதர்களை பாராட்டி பரிசு பெறும் இலக்கியங்களை படைத்தனர். இன்றும் கூட அது தொடர்வதை பார்க்கிறோம்.

 

 

                   இந்நிலையில் நாயக்கர் ஆட்சியில் ஆலயங்கள் மறுமலர்ச்சி பெற்றமையால், ஆலயத்தை ஒட்டி வாழ்ந்து வந்த தமிழ் பண்ணிசையானது அன்றைய நாட்டார் அம்சங்களையும் கலந்து கொண்டு புது வடிவம் பெற்றது. இந்த புது பண்ணிசை மரபு கர்நாடக இசைக்கு ஒரு முன்னோடியாக அமைந்தது.

 

 

                   கர்நாடக இசை என்பது பழந்தமிழ் பண்ணிசைக் கூறுகளின் நுணுக்கங்களை அடிப்படை வேர்களாக கொண்டு, இங்கிருந்த நாட்டார் இசைக் கூறுகளுடன் வட இந்திய இசைக் கூறுகளையும் கலந்து, உருவான இசை வடிவம் ஆகும். அதன் மொத்த அடிப்படையும் தமிழ் இசையே ஆகும். சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் இசை குறித்த செய்திகள் இன்றைய கர்நாடக இசையின் மூல இலக்கணமாக இருப்பதை திரு.ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளார்கள்.

 

 

                   இன்றைய இராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிருபித்து இருக்கிறார். இராகங்கள் உண்டுபண்ணும் முறை, பாடும் முறை ஆகியவற்றை பழந்தமிழ் இசை இலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து விளக்கிக் காட்டியுள்ளார். வடக்கே போற்றப்படும் இந்துஸ்தானி இசையும், தமிழ் இசையின் மூலத்தில் தோன்றிய தமிழ் இசையே என நிருபித்துக்காட்டியுள்ளார்.

 

 

                   தமிழில் இசை பற்றி ஒன்றும் இல்லை என்றிருந்த காலத்தில் திரு.ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் உலகில் தோன்றிய இசைகளுக்கெல்லாம் முதலும், மூலமும் ஆனது தமிழ் இசை என நிருபித்துக் காட்டியுள்ளார். தற்கால இசை நூல்களிலேயே முதல் நூலாக பண்டிதர் இயற்றிய கர்ணாமிருத சாகரம் என்னும் நூலே போற்றபடுகிறது. தமிழ் இசையின் தொன்மையையும், அதன் மூலத்தையும் உலகிற்கு வெளிக் கொணர்ந்த திரு.ஆபிரகாம் பண்டிதரை போற்றுவோம் !

 

 

                   கர்நாடக இசை என்பது தொன்மை இசை என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது. இன்னும் விளக்கமாக சொல்வதானால் கரு என்றால் மறைந்த, அழிந்த, மங்கிய, இருண்ட என்ற பொருளில் கடலில் மூல்கிப் போன அல்லது மறைந்து போன நாடான குமரி நாட்டின் இசை எனலாம் அதாவது கடலில் மூழ்கி போன பாண்டிய நாட்டின் இசை என்ற பொருளில் பண்டைய நாட்டின் இசை, கருநாட்டின் இசையானது. அது சொல் வழக்கில் கருநாடக இசையானது. வட சொல்லில் கருநாடக சங்கீதமானது.

 

 

                  தமிழர்களே ! கருநாட்டின் இசை நம் பாண்டிய நாட்டின் இசையான பண்டைய தமிழ் இசையே ! தமிழர்களாகிய நாம் இசையை கேட்டு ரசிக்கும் கூட்டமாக மட்டுமே இருந்து வருகிறோம். இசையின் அறிவியல் நம் முன்னோர்கள் நமக்கு அருளிய சொத்தாகும். அதை வரலாறு நெடுகிலும் ஏற்ப்பட்ட இயற்கை அழிவிலும், அயலான்களின் (குறிப்பாக வடுகர்களின்) ஆட்சி அதிகாரத்திலும் வந்தவர்களிடம் இழந்து விட்டு அடிமைகளாகவே வாழ்ந்து வருகிறோம். இனிமேல் ஆயினும் நம் வாரிசுகளையாவது, இசை நம் பாட்டன், முப்பாட்டன் சொத்து என உணரச் செய்து, இசை, பாடல், நடனம், நாட்டியம் என அனைத்தும் கற்றறியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம். தமிழகத்தில் தமிழ் தேசிய உணர்வுள்ள தமிழனின் ஆட்சியை உருவாக்குவோம். குழந்தை பருவம் முதல் மேல்நிலை கல்வி வரை இசையை இலவசமாக ஒரு துணை பாடமாகக் கொண்டு படிக்கச் செய்து, இசை அறிவியல் உணர்ந்த மேம்பட்ட மனிதர்களாக்குவோம் ! மேதைகளாக்குவோம் !! இசையால் உலகை ஆள்வோம் !!!

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக