காமராசர் எதை செய்தார் ?!

 

காமராசர் எதை செய்தார் ?!

 


காமராசர் பற்றி ஒரு பதிவு போதும் என நினைத்தேன். காமராசர் பக்தர்களுக்கும், ஈ.வெ.ரா. பக்தர்களுக்கும் ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டபடியால் மேலும் விளக்க வேண்டியுள்ளது.

 

 

காமராசர் அதை செய்தார், இதை செய்தார் கல்வியை, மதிய உணவை இலவசமாக தந்தார். தொழில்நுட்ப கல்வியை உருவாக்கினார், தொழில் சாலைகளை உருவாக்கினார், அணை கட்டி நீர் மேலாண்மையை செயல் படுத்தினார் என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். அதில் நூற்றுக்கு எம்பது சதம் மத்திய அரசு கொண்டுவந்த நலதிட்டங்கள் ஆகும்.

 

 

ஒரு கட்சியானது ஆட்சிக்கு வந்துவிட்டால் அது மக்களுக்கான நல திட்டங்களை செய்யதான் வேண்டும். அது ஒரு அரசின் கடமையாகும். காமராசருக்குப் பின் வந்த அரசுகளும், அதன் தலைவர்களும் தமிழ் நாட்டுக்கு நல திட்டங்கள் செய்யவே இல்லையா ! காமராசருக்கு பின் நல திட்டங்கள் எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லையா ! காமராசருக்கு பிறகு வந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று யாரும் நல திட்டங்கள் செய்ய வில்லையா ! சுதந்திரத்திற்கு பின் அரசை பொறுப்பேற்றவர்கள் தொடங்கி வைத்த மக்கள் நல திட்டங்களை அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் மேம்படுத்தி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவில்லையா !

 

 

சுதந்திரத்துக்கு முன் பிரிட்டிஷ்காரன் நாட்டை முன்னேற்றவில்லையா ! வடுக விஜய நகர பேரரசும், அதன் தொடர்ச்சியான வடுக பாளைய காரன்களின் அட்டுழியங்களால் பலவீனப்படுத்தப்பட்ட தமிழகம் வளமாகவில்லையா ! உடன் கட்டை ஏறுவது, குழந்தை திருமணங்களை தடை செய்யவில்லையா ! மாட்டு வண்டிக்கு மாற்று தெரியாத நமக்கு புகை வண்டி, பேருந்து, மோட்டார் வாகனங்கள் என அறிவியல் கண்டு பிடிப்புகள் நம்மை வந்து சேரவில்லையா ! நூற்பாலைகள் தொழிற்சாலைகள் நிறுவப்படவில்லையா ! இங்குள்ள வருணாசிர்மத்தின் தீண்டாமையை பிரிட்டன் ஆளுநர்கள் எதிர்க்கவில்லையா ! இருப்பினும் வெள்ளையனை வெளியேறும்படி போராடினோம். அவனால் நமக்கு அறிவு வளர்ச்சியில் நன்மையும், பொருளாதாரம் மற்றும் வாழ்வியலில் தீமையும் என உணர்ந்ததால் வெளியேறும் படி கூறினோம்.

 

 

பிரிட்டனும் இந்தியாவும் ஒரே நாடாகத்தானே இருந்தது. பல நாடுகளை ஒன்றிணைத்து ஒரே நாடாகத்தானே வைத்திருந்தான். அதில் இருந்து தானே நாம் பிரிந்தோம் ! பிரிட்டன் வருகைக்கு முன் இந்தியா என்பது என்றுமே ஒரே நாடாக இருந்ததில்லை என்பது தானே உண்மை !

 

 

இந்தியாவில் மையபடுத்தப்பட்ட வட இந்திய ஆட்சியாளர்களால் பிறமொழி பேசுபவர்களிடம் இந்தியை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவை உருவாக்க தேசபக்தி என்ற பெயரில் அடக்குமுறை சட்டங்களையும், பிற மொழிகளை அழித்துவிடும் வேலைகளையும், குறிப்பாக தமிழகத்தை சிதைப்பதன் மூலம் இன்றைய இந்தியாவை இந்தி இந்தியாவாக்க காமராசர் முனைந்தார் என்பதாலேயே விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். இந்தியை எதிர்த்து போராடிய மக்களை பார்த்து, பத்து காலிகளையாவது சுட்டு தள்ளவேண்டும் என ஈ.வெ.ரா., திராவிட பண்பில் இருந்து இந்தியத்தை உசுப்பேற்றியதால் காமராசரோடு சேர்த்து ஈ.வெ.ரா.,வையும் விமர்சிக்க வேண்டியுள்ளது. மேலும் தமிழ் மொழி, இனம், பண்பாட்டுக்கு எதிராக ஏராளமான விசம பிரச்சாரங்களை செய்தார் ஈ.வெ.ரா. அதற்கேற்ற அரசியலையும் செய்தார்.

 

 

மிக சிறந்த யோக்கியனான காமராசரை இன்று முட்டுக் குடுத்து தாங்குபவர்களின் பாட்டனும், அப்பனும் தான் வாக்களிக்காமல் தோல்வியுற செய்தார்கள். அப்படி என்றால் அவர்கள் எல்லாம் முட்டாள்களா ! வலியும் வேதனையும் அந்த ஆட்சி காலத்தில் வாழ்ந்தவனுக்கு தானே தெரியும் !

 

 

மதிய உணவு கொடுத்தாவது அரசு பள்ளியை நடத்தினார். மேலும் புதிய இலவச கல்வி சாலைகளை திறந்தார், ஏன் தெரியுமா ? தமிழர்களை இந்தி இந்தியனாக்க வேண்டும். பள்ளிக்கே வராதவனுக்கு இந்தியை எப்படி கொண்டு போய் சேர்ப்பது. எல்லா குழந்தைகளையும் பள்ளிக்கு வரவழைத்து விட்டால் அடுத்த தலைமுறையை இந்தி பேசும் இந்தியனாக மாற்றிவிடலாம் என்பது காமராசரின் கனவு !

 

 

நதி நீர் மேலாண்மைக்கு வித்திட்டார் காமராசர் ! ஆனால் நதியால் வரும் நீர் உற்பத்திக்கான இயற்கை வளங்கள், நீர் பிடிப்பு பகுதிகள் எல்லாம் அடுத்தவன் கையில் தாரை வார்த்தார். பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் பகுதிகளை எல்லாம் பிற தேசிய இனங்களிடம் கையளித்து, அங்கே சிறுபான்மை தேசிய இனங்களாக்கி, அகதிகளாக்கிவிட்டார்.

 

 

வட வேங்கடம், தென் குமரி ஆயிடை கூறும் தமிழ் உலகம் காமராசரால் வீழ்த்தப்பட்டது ! பின் எப்படி ? போற்றுதலுக்குரிய தமிழின பெருந்தலைவனாக ஏற்கமுடியும் !

 

 

திருப்பதி, சித்தூர், மைசூர், பெங்களூர், பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி மாவட்டம் முழுவதும், சபரி மலை என அனைத்தும் தமிழகத்தின் எல்லைகளாக இருந்து தமிழக மண்ணை வளமாக்கிய பகுதிகளாகும். எல்லாம் பறிபோனது ! தமிழ் தேசத்தின் உட்புறங்களில் இருந்த இயற்கை நீர் மேலாண்மையால் மிகுந்திருந்த மண்ணின் ஈரப்பதத்தை காலி செய்ய முடிவே இல்லா வளர்ச்சிகாணும் சீமை கருவேல விதைகளை விதைத்து, தமிழகத்தை வறண்ட பாலை நிலமாக்கினார் காமராசர். அதன் பின்னால் உள்ள அரசியலை எவனும் பேசுவதில்லை. கேட்டால் அவர் அறியாமையால் செய்தார் என்பார்கள். ஒன்றுமே தெரியாமலா ?! அகில இந்திய காங்கிரஸ் தலைவனாகவும், காங்கிரசையும், இந்தியாவையும் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருந்தார்.

 

 

தமிழன் வாழ, நமக்கு பின்னே நடந்தவைகளையும், நமக்கு முன்னே நடப்பவைகளையும், இனி நடக்கப் போவதையும் அரசியலாய் பாருங்கள் உண்மை வெட்ட வெளிச்சம் ஆகும் ! தமிழ் இனம் தப்பி பிழைக்கும் !

 

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).    

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக