காமராசர் தமிழினத்துக்கு ஓர் விபத்து !

காமராசர் தமிழினத்துக்கு ஓர் விபத்து !

 


 

பெருந்தலைவர் என்றும், கர்ம வீரர் என்றும் தமிழகத்தில் சிலரால் போற்றப்படும் காமராசரை தமிழ் நாட்டின் பேராய கட்சிக்காரர்களை விட, தமிழ் தேசியம் பேசுகிறவர்களே அதிகம் காமராசர் புகழ் பாடுவதை பார்க்க முடிகிறது. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே காமராசரால் தமிழர்களுக்கு விளைந்த தீமைகளை சுட்டிக் காட்டுகின்றனர்.

 

 

காமராசர் தமிழன் என்றும், தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்றும் காமராசருக்கு வாக்களிக்க கோரியவர்தான் ஈ.வெ.ரா. ! காமராசரின் ஆட்சி காலத்தில் அவருக்கு பக்க பலமாய் இருந்தவர் ஈ.வெ.ரா.

 

 

இந்திய தேசிய அரசியலைக் கொள்கையாகக் கொண்ட ஒரு தமிழனை வைத்து, தமிழகத்தின் எல்லைகளை சிறுமைப் படுத்தி, தமிழ் மொழி மீது இந்தி மொழி மூலம் ஆதிக்கம் செலுத்தி, தமிழர்களின் மீது அடக்குமுறையை ஏவி, இன ஓர்மைக்கு எதிராக வகுப்புவாதத்தை ஊக்குவித்து, மண்ணை மலடாக்கி தமிழர்களுக்கு துன்பம் விளைவித்து, இந்திய தேசிய முதலாளிகளுக்கு சேவை செய்வதன் மூலம் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளானவர் காமராசர். இதில் அரசியல் வெற்றி பெற்றார் வடுக கன்னடர் ஈ.வெ.ரா.

 

 

காமராசரால் தமிழ் தேசியம் வீழ்த்தப்பட தமிழர்களை மொத்தமாக அரசியல் அறுவடை செய்ய காத்திருந்து, இந்திய தேசிய அரசியலை வீழ்த்தி வெற்றி கண்டது திராவிட தேசியம் !

 

 

பாவம் ஒரு பக்கம் ! பழி ஒரு பக்கம் ! பலனை விழுங்கி ஏப்பம் விட்டவன் நடு பக்கம் !

 

 

கரையில் கரடிக்கு பயந்து நீரில் குதித்து முதலையிடம் மாட்டி கொண்டான் தமிழன் !

 

 

ஒருவன் நல்லவன், வல்லவன், கொடையாளி, நேர்மையானவன், ஊழல் அற்றவன், கை சுத்தமானவன் என்பதெல்லாம் ஒரு தேசியத்தின் உயர்ந்த பட்ச தலைவன் என ஏற்க பயன்படும் முழு தகுதிகள் அல்ல ! இவை எல்லாம் துணை தகுதிகள் தான் ! அவன் கொண்டிருக்கும் அரசியலே முதன்மையானது ஆகும். அவன் பின்பற்றும் கொள்கையே அவனுக்கு அடையாளமாகும்.

 

 

உணர்வால் தமிழனாக வாழாது, இந்தி, இந்தியனாக வாழ்ந்தவனை, தமிழ் தேசிய இனத்தின் முரண்பட்ட அரசியலை ஒரு பொருட்டாக மதிக்காத, பாதிக்கப் படுபவன் தமிழன் தான் என்பதை அறிந்தும், இந்திய தேசிய அரசியலுக்கு சேவை செய்தவனை, தமிழ் இனத்தின் பெருந்தலைவனாக ஏற்பது, ஏற்கச் சொல்லுவது, அதிலும் தமிழ் தேசியம் பேசுபவர்களே சொல்லுவது அயோக்கியதனம் அல்லவா !

 

 

திராவிடம் வேண்டாம் ! ஆனால் ஈ.வெ.ரா. வேண்டும் ! என்பதற்கும், இந்தி, இந்தியம் வேண்டாம் ! ஆனால் காமராசர் வேண்டும் ! என்பதற்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை.

 

 

திராவிடம் வேண்டாம் என்றால் ஈ.வெ.ரா. என்னும் குறியீடும், அடையாளமும் வேண்டாம் ! என்பதை போல, இந்தி, இந்தியம் வேண்டாம் என்றால் காமராசர் என்னும் குறியீடும், அடையாளமும் வேண்டாம் என்பதே சரி !

 

 

ஈ.வெ.ரா.வை விட முடியாது என்பவன் தமிழ் தேசியத்தை கைவிட்டு, திராவிட அமைப்புக்குள் நீர்த்துப் போகட்டும் ! அதேபோல், காமராசரை விட முடியாது என்பவன் தமிழ் தேசியத்தை கைவிட்டு, இந்திய தேசியத்திற்குள் மூழ்கி போகட்டும் ! இனியும் தமிழர்களை ஏமாற்ற இயலாது !

 

 

காமராசரை முட்டுக்கொடுத்து தாங்கும் தமிழ் தேசிய தலைமையால் தமிழினம் பின்னடைவைத் தான் சந்திக்கும் ! எனவே, தமிழனுக்கு காமராசர் தேவையில்லை என்பதை சமரசத்திற்கிடமின்றி முடிவெடுத்தால் அன்றி, தமிழ் தேசிய அரசியலுக்கு வேறு வழி இல்லை.

 

 

காமராசர் தமிழ் இனத்துக்கு நேர்ந்த ஓர் மாபெரும் விபத்தாகும் !

 

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).     

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக